போர் தொழில் செய்யும் அவன் வில்லாளன்
உருகெழு தோற்றமும், உடைவாளின் வீச்சும்
மிடுக்கு தெறிக்கும் மல்லர் குலத்தோன்..
நிந்தியன் அவன் வேல் வீச்சுக்கு முன் அகலவன்
தாங்காது திரும்புவான் புறமுதுகிட்டு வந்த வழிநோக்கி..
கிடுகுப்படையை கிடுகிடுக்க செய்து வெற்றி முடி சூடி
வியன்நெடும் பணைத்தோள் ஆடுநடை வீரன் அவன்
பரி மேலமர்ந்து பாய்ந்து விரைந்தான்
போர்க்களம் விட்டு…
மாலை மயங்கி இருள்தழுவி முயங்கிய நேரம்
இரவாய் சமைந்தது பொழுது
முழு மதி இரவாம் அன்று
இருளை கிழித்தவண்ணம் ஒலி ததும்பும் வெளிச்ச கீற்றில்
நாலு கால் பாய்ச்சல் வேகம் கண்டது அவன் குதிரை…
நொடிப்பொழுது பார்வை சுழன்றதில் கண்டிட்டான்
கண்ணெட்டும் தூரத்தில் அதிசய நிகழ்வுதனை
என்ன இது ..
தடாகத்தில் தெரிவது இரு முழு நிலவுகளின் வடிவு பிம்பங்கள்..
எப்படி சாத்தியம் ..
கண் துஞ்சா அயர்வில் களைத்ததில் புலப்படுவது
காட்சிபிழை போலும்..
எனினும் ஒரு நொடி மெய் விதிர்த்துப் போனான்..
தலைவனின் மனபோக்கு பாடம் போலும்
கடிவாளம் இல்லாமலே கட்டுப்பட்டது குதிரை…
நிதானித்து மீண்டும் ஒருமுறை உறுத்த விழிகளில் உற்று நோக்கினான்
உண்மையே கண்டது ..
வான் தவழும் நிலவோடு போட்டியிடும் குளிர் சாரல் ஒளி அழகாய்
தடாகத்தின் பக்கம் நிற்பது நங்கை நிலவு ..
தடாகம் நிரம்பி பூத்த தாமரைகளின் மேல்துஞ்சும் பனித்துளி தொட்டு சித்திரம் வரைந்தவண்ணம்..
நங்கை அவளும் அது சமையம் அரவம் கேட்டு துணுக்குற்று திரும்பினாள்…
துளியளவும் அசராத மிடுக்கிட்ட மென் தோற்றம் அவள் கொண்டது..
பேதையின் உயிருண்ணும் கண்கள் ஊடுருவி கூர்ந்தது அவனை
ஒற்றை பார்வை இத்துணை வீழ்த்துமா!!
யான் மெல்லியல் பித்து போற்றுபவன் அல்லவே..
இருந்தும் அலையுறும் மனப்போக்கை என்னவென்று சொல்வது
இந்த விழிப்போர் கண்டிட்ட வான்மதியும் சற்று சொக்கித்தான் போனாள்..
மேக திரைக்குள் முகம் மூடி மறைந்திட்டாள் சிலநொடி நேரம்..
சற்றே நெருக்கி அருகில் செல்ல எத்தனித்து இரு அடி முன் எட்டு வைத்தான் வில்லாளன்…
யாழின் நரம்புகள் துடித்து இசை கசிவது போல்
மான்விழி மங்கையின் கண்களில் நவரசம் துடித்தது
இரண்டடி பின்னோக்கி நகர்ந்திட்டாள் மருட்சி காட்டாமல் ..
எடுத்த அடி நகராமல் நிலைத்து விட்டான் வில்லாளன்
வெற்றியை மட்டுமே சுமந்து பண்பட்டவன்
தோற்றுவிட தயார் என அறிவிப்பது போல…
சுடர்நங்கை நேர்நோக்கு பார்வையில்
வீசிய கூரம்பு அவன் விழுபுண் நெஞ்சிலே
பாய்ந்து வீழ்த்தியது ..
எடை கூடி
கனத்தது இதயம்
இந்நாழிகை தொட்டு எதை சுமக்கிறான் அவன்…
-புவனா கணேஷன்
சங்ககால தமிழ் சொல்லாடல்களை கலந்து புனைந்த குறுங்கதை
மள்ளர் – வீரர்
அகவலன் – பகைவன்
ஆடுநடை – பெருமித நடை
நல்லிசை – புகழ்
வியன்நெடும் – நெடுக வளர்ந்த
பணைத்தோள் – கம்பீரமான புஜம்
கிடுகுப்படையை – கேடயம் தாங்கிய படை