சின்னஞ்சிறு அதிசயமே

0
351

“எல்லாம் எடுத்தாச்சு மா, கிளம்பறேன்” வாசல் கேட்டை அடைத்து விட்டு, சைக்கிளை திருப்பும் போது வழக்கம் போல அவள் பார்வை எதிர்வீட்டு மேல்மாடிக்கு தாவியது.

ஏழாவது நாளாக அந்த இடம் இன்றும் வெறுமையை காண்பித்தது. இந்த நேரம் வழமையாக அவள் கிளம்பும் போது, அவளுக்கென அவளையே பார்க்கும் அந்த விழிகளுக்குரிய முகம் அங்கே இல்லை.ஆனால் ஏன் இல்லை…ஒரு சோர்வு ஒட்டிக்கொண்டு மனதில் அடம்பிடித்தது.

“பராக்கு  பார்க்காமல் கிளம்பு சீக்கிரம் எனக்கும் நேரம் ஆகுது”  அம்மா விரட்டினாள்.இயந்திரத்தனமாய் மதுவின் கால்கள் மிதிவண்டி செலுத்தியது.. மனசு மட்டும் எதிர் வீட்டு மாடியில் நிலைத்து நின்றது..
இந்த குடியிருப்பில் வீடு மாற்றிக்கொண்டு வந்து நான்கு மாதம் முடிகிறது கிட்டத்தட்ட. “ச்சு என்னம்மா இது.. இங்கே, சுத்தி சுத்தி இருபவங்க யாரும் நம்ம ஆட்கள் இல்லை… காச்..மூச் மொழியிலே காதிலே விழறது எல்லாம் ஒண்ணுமே புரியலை.. இந்த ஏரியாவில் மனசு ஒட்டாலையே..”
அம்மாவிடம் குறைபாட்டு வாசித்தாள் மது ..
” புது இடம் அப்படி தான் இருக்கும் போக போக சரியாகும். கிளம்பு கிளம்பு”  அன்னைக்கும் இதே போல தான் அம்மா விரட்டினாள்.கேட்டை சாத்தி, சைக்கிளை ஒரு சுழற்று, லாவகமாய் திருப்பி, செலுத்த நினைத்த கணம் மிக மிக எதேச்சையாக பார்வை எதிர்மாடியில் விழுந்தது.

இவளையும், இவளது அசைவுகளையும் கண்கொட்டாமல் பார்த்த விழிகளுக்கு சொந்தகாரியாய் அங்கு ஒரு பெண்.. மதுவின் ஒத்த வயது தான் இருக்கும் அவளுக்கும்… சுண்டினால் ரத்த நிற மேனிக்கு இன்னும் அழகு சேர்ப்பது போல பட்டு வண்ண ரோஜா நிறத்தில் உடை.
அவள் முகமும், உடையும் எளிதாய் சொன்னது அவளும் மார்வாடி பெண் என்பதை.நிஜத்தில், என்னை தான்.. பார்க்கிறதா? இந்த பெண்.. சற்று வியப்போடு லேசாய் உதடுகளை நீள அளவு கூட்டி ஹலோ சொல்வது போல மென்னகை செய்தாள் மது.
அடுத்த விநாடி அந்த எதிர்வீட்டு அழகி முகத்தில் ஆயிரம் ரோஜாக்கள் பூத்தது…அத்தனை பூரிப்பு, உண்மையில் அழகி தான் …விகசித்து, மலர்ந்தது புன்னகை அவள் முகத்தில் … ஹைய்யா எனக்கு ஒரு சிநேகிதி கிடச்சாச்சு… மதுவுக்கு மனசு அந்த நிமிடத்தில் துள்ளாட்டம் போட்டது..

மாலையில்,வீடு திரும்பி.. கோச்சிங் கிளாஸ் கிளம்ப தயாராக, துணி அலமாரியை திறந்த போது கண்ணில் பட்டது பிறந்த நாள் உடை.. அதே ரோஜா நிறத்தில். எடுத்து உடுத்தி வெளியே வந்து எதிரே பார்க்க தவறவில்லை மது.
அழகி, இந்த தடவை கண்களாலும், விரல்களாலும் அபிநயம் பிடித்து பேசினாள்.அழாகாய் இருப்பதாக பொருள் படும் படி… பதிலுக்கு மதுவும் அதே போல் செய்து காட்டினாள்.உனக்கும் அழகாய் இருக்கிறது என்கிற மாதிரி.
அன்று தொட்டு அதுவே வழமையாகி போனது ..
மது எந்த நேரம் எங்கே போவாள் என்பது அழகிக்கு அத்துப்படி. அந்த நேரம் எல்லாம் அந்த இடத்தில் காத்திருந்து, கிளம்பும் போது கையை வானம் நோக்கி மேலே உயர்த்தி டாட்டா சொல்லுவாள் அழகி. பதிலுக்கு இங்கிருந்து டாட்டா பறக்கும்.
திரும்பி வரும் போது அழகு புன்னகை வரவேற்பு செய்வாள்… சீருடையிலிருந்து  வேறுடை அணிவது என்றால் அது அழகி அன்றைக்கு என்ன நிறத்தில் உடுத்தி இருந்தாலோ அதே நிறம் தான் மதுவுக்கும்.
ஒரு சொல்லில் விளங்காத புரிந்துணர்வு, நட்பு மொட்டு இருவருக்கும் மலர்ந்து இருந்தது.
 இவள் மட்டும், கிழே இறங்கி வந்தால் எத்தனை நல்லா இருக்கும்… நிறைய பேசவேண்டும். நான் பேசும் மொழி அவளுக்கு புரிகிறதோ.. இல்லையோ ..ஆனால் நிறையா பேசி, அவளும் பேச அவள் குரலை கேட்டு விட வேண்டும். மது இப்படி நிறைய நினைத்துகொள்வாள்.
அவளும் வந்தது இல்லை.. மதுவுக்கும் முன்னேறி செல்வதில் தயக்கம்.அழகி வீட்டில் நிறைய பேர் தென்பட்டார்கள். வயதானவர்களே ஆறு, ஏழு பேர்.கூட்டு குடும்பம் போல!! அதில் மிகவும் பருத்த உடல்வாகில் ஒரு பெண்மணி மட்டும் வெளிவாசலில், இங்கும் அங்கும் ஓயாமல் நடமாடி கொண்டு இருப்பதை மது கவனித்து இருக்கிறாள். அந்த பகுதி பெண்களுக்கே உரிய அழகு நிறத்தில் பாட்டியும், அவளது முழுக்கை சட்டை,பாவாடை, மேல் தாவணி உடையும் பந்தமாய் பொருந்தி ஈர்க்கும். ஆனால் அவர்கள் யாரும் கூடி கலந்து பேசுகிறவர்களாக இருக்கவில்லை…

எப்போதாவது கிளாஸ் முடிய தாமதம் ஆகி நேரம் கழித்து வந்தால் ” ஏன் தாமதம்”மாதிரி மணிக்கட்டில் விரல் வைத்து அடவு பிடித்து கேக்கும் அழகி … இன்று இதோ தாமதமாக வரும் என்னை கண்டுகொள்ள வராமல் எங்கே தான் போனாளோ!!இப்போதே, எப்படியும் இதை தெரிந்து கொண்டு விட வேண்டும் … 
புத்தகங்களை உள்ளேவைத்த மயம் ..
வெளியே வந்து நின்றாள்.எதிர் வீட்டில், பாட்டி கூட வெளிவாசலில் கண்ணில் படவில்லை, உள்ளே போயி என்னவென்று எப்படி விசாரிக்கலாம்.. உருப்போட்ட வண்ணம் நின்றவள். எதிர்வீட்டு வேலைக்காரம்மா பணியை முடித்து செருப்பை மாட்டி வாசலுக்கு வெளியே வருவதை பார்த்தாள்…

இரண்டே எட்டில் ஓடி பிடித்து… “அம்மா, அந்த வீட்டில் ஒரு பெண், என் வயதில் இருப்பாளே, மாடியில் பார்த்து இருகிறேன், அவள் எங்கே ” வினவினாள் மது.

“ஐய்யோ, அந்த வாய் பேசமுடியாத புள்ளே செத்து போச்சுதே.. ஒரு வாரம் செண்டாச்சு, எதயத்திலே கோளாறாம!.. நம்மள மாதிரி இல்லை.. அவங்க ஆளுங்க செத்தா,அழுது ஊரை கூட்டாம, அக்கம்..பக்கத்திலே யாருக்கும் தெரியாம அடக்கம்ப்பண்ணிபோடுவாகலாமா, நல்ல புள்ளே அது.. அன்னைக்கு ராத்திரிலே மூச்சு திணறி”…. இன்னும் எதிரே நின்றவள் ஏதேதோ சொல்வது, அதற்குமேல் ஒன்று கூடவிளங்காமல்  நெஞ்சுக்கூட்டில்  அடைத்து ஒ என்று வந்த வேதனை, கண்களில் மடை திறக்க சிலையென நின்றாள் மது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here