Travel Story – சென்னையிலிருந்து துபாய்

0
128

நேற்று மாலை வீட்டிலிருந்து கிளம்பும் போதே ஒற்றைத்தலைவலி கூடவே வந்தது..

புக் செய்தால் எப்போதும் சொதப்பி கேன்சல் ஆகி ஏழரையை கூட்டும் டாக்ஸி கிடைத்து நேரத்திற்கு.. விமான நிலையம் போய்ச்சேருவதில் சிக்கல் வந்துவிடக்கூடாதே என்கிற டென்ஸன். ஆன்லைனில் செக்கின் செய்தாயிற்று என்றபோதும் வீட்டிலிருந்து வெகு சீக்கிரமே கிளம்ப திட்டமிட்டிருந்தேன். அதிசயமாக ஊபர் உடனே கிடைத்து வெகுசீக்கிரமே விமானநிலையம் வந்து சேர்ந்தோம் நானும் சின்ன மகளும்.

கூட்டம் அதிகம் இருக்கவில்லை. வெள்ளி இரவு பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

கைப்பைகளை சோதனைக்கு போடும்போது சம்ரிதாவுடைய பேக்பேகை தனியே திறந்துகாட்டச்சொல்லி சோதனையிட்ட ஆபிசர் அவளுடைய பையில் இருந்த guess who, monopoly,uno விளையாட்டு கார்டுகளைப்பார்த்து அதிசயித்து போய் “உனக்குப் பெரிய டாய் கேங்க் இருக்கிறதா!?” என்றார்.

“இல்லை இதோ என் அம்மாவோடு மட்டும்தான் விளையாடுவேன்” என்று என்னைக்காட்டினாள்.

முழு நாற்பத்தியெட்டு மணி நேரங்களை கதவடைத்து வீட்டிற்குள் நாங்கள் இருவர் மட்டுமே இருந்த இந்த

புயல் மழை கரண்ட் கட் சமயத்தில் வீடுமுழுக்க கேண்டில் லைட் பொருத்தி வைத்து இருவரும் இவற்றைத்தான் விளையாடிக்கொண்டிருந்தோம்.

விமான நிலைய சம்பிரதாயங்கள் முழுவதும் முடித்த பிறகு எங்களிடம் இரண்டு மணி நேரத்திற்குமேல் இருந்தது. ஆனால் இருவருக்குமே விளையாட தோணவில்லை.

தலைவலியை நேர்செய்ய வழியாக ஃபுட்கோர்ட் ஏ2பியில் ஃபில்டர் காபி ஆர்டர் செய்தேன். ஒருத்திக்கு மட்டும் காபி வாங்கினால் ஊருக்கே விலை போட்டு கொடுத்தார்கள். ஒரு கப் காபி 190.

காபியை பருகியபடி அமர்ந்திருந்த காத்திருப்பு நேரத்தில்..

சம்ரிதா தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு வயதாளியை காட்டி

“இவங்க நாலாவது Granny. எப்படி எல்லா பாட்டிகளுக்கும் மட்டும் இவ்வளவு க்யூட் க்யூட்டான ஜாக்கெட் கிடைக்குதோ. இவங்க எங்கதான் வாங்கியிருப்பாங்க?”

எழுந்து போய் கேட்டு தெரிஞ்சிகிட்டு வா என்றதும் தெரியாதவங்ககிட்ட போய் எப்படி கேட்பது! அவங்க என்ன நினைப்பார்களோவென்று தயக்கம் காட்டினாள். அவளுக்கு இன்னமும் புதியவர்களோடு பேசிப்பழகுவது வரவில்லை.

“நோ.. பாட்டியெல்லாம் ஒன்னுமே நினைக்கமாட்டாங்க. நீ போய் பேசினா சந்தோசம்தான் படுவாங்க” என்றபோதும் அவள் நம்பவில்லை. வேணும்னா பார் என்று நான் கையில் குடித்து முடித்திருந்த காபி கப்பை டஸ்ட்பின்னில் போடுகிற சாக்கில் எழுந்து போய் தனியே அமர்ந்திருந்த அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

மலையாளி அவர். சம்ரிதாவிற்கு பிடித்திருந்த அந்த ஜாக்கெட்டை அவர் முன்னெப்பொழுதோ மஸ்கட்டில் வாங்கியிருந்தாராம். இப்போது கத்தார் வழியாக மகனோடு லண்டன் போகவிருக்கிறார்.

கப்பை போட்டுவிட்டு திரும்பி வந்து “பார்த்தாயா.. பாட்டிகளிடம் பேசுவது ரொம்ப ஈஸி. அவர்களுக்கு தானாகப் போய் பேசுபவர்களை ரொம்ப பிடிக்கும்” என்றேன். போலவே

அந்த வயதாளி.. அவரின் மகன் வந்ததும் இருக்கையில் இருந்து எழுந்து கிளம்பும் முன் என்னைப்பார்த்து கையசைத்து போய்வருகிறேன் என்றார். சந்தோசமா இருந்தது.

விமானத்தில் ஏறியதுமே தலைவலிக்கு மாத்திரை வேண்டுமென்று கேட்டு வாங்கி விழுங்கிவிட்டு போர்த்திக்கொண்டு உறங்கிவிட்டேன். எப்போதும் போல் படம் எதுவும் பார்க்கவில்லை.

சென்னைக்கு போகும் போதும் சரி நேற்று அங்கிருந்து திரும்பும் போதும் சரி எனது பக்கத்து இருக்கை(மட்டும்) காலியாகவே இருந்தது ஆச்சரியம். நால்வருக்கான வரிசையில் நாங்கள் இரு பெண்கள் மூன்றாவது காலி நான்காவதில் ஒரு ஆண். போகும்போதும் இதே தான்.

பக்கத்து இருக்கை காலி என்பதால் வசதியாக சாய்ந்து கிடந்து உறங்கி எழுந்து பயணத்தை முடித்தாயிற்று. தலைவலியும் போயிருந்தது.

துபாய் விமானநிலைய டாக்ஸி சர்வீஸுக்கு ஈடு இணையே இல்லை. நடுநிசியிலும் சிக்கல் இல்லாமல் இலகுவாக வீடுவந்து சேர முடியும்.

வரிசையாக டாக்ஸிகள் நிற்கும். டரைவர்கள் இறங்கி நின்றிருப்பார்கள்.

பெண்கள் மட்டுமாக என்றால் பெண் ட்ரைவரின் டாக்ஸியை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். வரிசையாக நின்ற டாக்ஸிகளை மறுத்து பிங்க் டாக்ஸியை நோக்கி போனதும் அந்த பெண் ஓட்டுநர் புன்னகைத்தபடி “ஓ சரி நான் தான் வேண்டுமென்று வந்தது மகுழ்ச்சி” என்றார்.

பக்கத்து டாக்ஸிக்காரர் எங்கள் அருகே வந்து “நகருங்கள் பெண்களே” என்றபடி பெட்டிகளை எடுத்து டிக்கியில் வைத்துக்கொடுத்துவிட்டு போனார். டாக்ஸி ஓட்டுபவர்களுக்குள் ஆண் பெண் பேதமில்லாது நல்லதொரு இணக்கம் இருப்பது தெரிந்தது.

ஆனால் வழியில் ஒரு ப்ரைவட் கார் பிங்க் டாக்ஸியை பார்த்ததும் பெண் ஓட்டுநர் என்பதை கண்டுகொண்டிருப்பான் போல சும்மா லைட் அடித்து லைட் அடித்து எரிச்சல் மூட்டியபடி கடந்து போனான். இவள் அவனைத் திட்டித்தீர்த்தாள்.

எங்களுக்கு வந்த ட்ரைவர் எத்தியோப்பிய பெண். அவள் பெயர் அபியோஸ். அழகான பெயர். விடுதலை என்பது பெயரின் பொருளென்றாள். இரவில் மட்டுமே வேலை செய்வதாகவும் பகல் எனக்கு இஷ்டம் போல சொந்தம்.. அதிலும் நாளை வாரவிடுப்பு முழு நாளும் துயில்வதற்கே ஒதுக்குவேன் என்றாள்.

தீபாவளிக்கு நாம் என்னென்ன செய்வோம் என்பதையெல்லாம் ஆர்வமாக கேட்டாள் அபியோஸ். அவர்களின் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளையெல்லாம் பேசினோம். நாங்கள் கிறிஸ்தவர்கள். ஆனாலும் எங்கள் நாடு இன்னமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் இங்கிருப்பதால் என் நண்பர்களோடு கொண்டாடப்போகிறேன். ஆனால் நேரமிருக்காது கிருஸ்துமஸ் சமயம் துபாய்க்கு நிறைய டூரீஸ்ட்கள்வருவார்களே. வேலையிருக்கும் என்றாள்.

வழி நெடுகிலும் பேசிக்கொண்டே வந்தோம்.

எங்கள் இடத்தில் இறக்கிவிட்டு உங்களைப்பார்த்ததும் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்க முடிந்ததும் மகிழ்ச்சி என்றாள் புன்னகையுடன்.

அபியோஸ்க்கு டாட்டா காட்டிவிட்டு வீடைந்த நேரம் அதிகாலை இரண்டு நாற்பது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here