அப்பா

வேரில் இருந்து விழும் நிழல்

0
367

சிறு வயதில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த குறள் ..

ஒரு சிறந்த தலைவன் இத்தகையவனாய் இருத்தல்

“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் ” -காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும். எம் அய்யன் மொழி ஊறிய கூற்று.

மிகையுணர்ச்சிக்கு தாழாதவனும், மென்னகை தவழும் முகத்தில் ஒளித் ததும்பும் கண்கள்,கூர் நுணுக்கம்,மிதம் இதைத் தான் ஒரு ஆணில் பெண் தேடுவது.

இது என் பார்வையில் நல்ல ஆண் மகனாக, நல்ல கணவனாக இல்லாதவன் கூட கனவுறுதியாய் சிறந்த தந்தையாக விளங்கக்கூடும்.. என் அப்பாவைப்போல —

எல்லா பெண் பிள்ளைகளுக்கும் போலவே எனக்கும் அப்பா தான் உலகத்தின் சிறந்த ஆண்மகன் என்றே எப்போதும் நினைப்பு. அப்பாவில் இருந்து தான் பெண் அடுத்த ஆண்களை கூர்கிறாள்.

வீட்டின் மூத்தப் பெண் என்பதாலும் அப்பாவையே அடர்த்தியாக பார்த்து வளர்ந்ததாலும் பெரும்பாலும் அவர் குணத்தையே பிரதிபலிப்பவள் ஆகிப்போனேன். அப்பா ஒரு சிறந்த வாசிப்பாளர், சிறந்த மேடைப் பேச்சாளர்.

உயிர்மெய் எழுத்துக்கள் கற்றுத் தெளிந்த வயதில் நேரடியாக வாசிக்க பாடப்புத்தகம் அல்லாமல் கதைப்புத்தகம் தந்தார்.

பாடப்புத்தகம் ஒரு விதமான திணிப்பு. கதைப்புத்தக வாசிப்பின் ருசியில் மொழியறிவு தானே கைவரப்பெறும் என்றபடி.. விரல் பிடித்து வரிகளில் நகர்த்தி எழுத்தெழுத்தாகக் கூட்டி வாசிக்கச் செய்வார்.

அம்புலிமாமா தான் முதன்முதலாய் வாசிக்க கையில் எடுத்த புத்தகம்.

இன்றளவும் அம்புலிமாமா,சந்தமாமா புத்தகங்கள் மனதில் நிழலாடும்.பிறகு முழுக்கதையும் அவர் தன் பாணியில், குரலில், ஏற்ற இறக்கத்தோடு வாசித்துக் காட்டும் போது கண்முன்னே கதையின் உருவங்கள் மிதக்கும்.

வேகமாய் அதே சமயம் பொருள் உள்வாங்கி வாசிக்க சிறந்தப் பயிற்சி தந்தவர் அப்பா. இப்படித்தான் அந்த வயதில் புனைவுக்கதைகளில் மூழ்கி முத்தெடுக்க விழைந்தது. பட்டிமன்றம்,பேச்சுப்போட்டிகளில் கலந்துக் கொள்ளும் போது கண்ணாடியில் நம் முகத்தை நாமே பார்த்துப் பேச கற்றுக்கொடுத்தவர் அப்பா. பிறகு மேடை ஏறியதும் எவர் முகமும் கண்ணுக்கு தெரியாது, தயக்கம் இல்லாமல், வாய் குழறாமல் பேச்சு கைவருமென.

உணவு விஷயமும், நுணுக்கி ருசித்தே என்பது அப்பாவிடம் இருந்து தொற்றிக் கொண்டது. சம்பிரதாயம்,பண்டிகைகள், பூஜை புனஸ்காரம் இதில் எதுவும் அப்பாவுக்கு விருப்பம் இருந்தது இல்லை. எனவே வளர்ந்த சூழலில் எனக்கும் இது எதுவும் தெரிந்து இருக்கவில்லை.. பின்னாளில் தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை. வாழ்கையை எந்த வித திணித்தலும் இல்லாமல் அதன் போக்கில் நீந்த விடுவதே பிடிப்பு. வீட்டில் சாமியோ பூஜையோ இல்லை என்றாலும் ஒரு கோவில் விடாமல் அழைத்துப் போயிருக்கிறார். கோவில் என்றால் பக்தி மார்கத்தையும் தாண்டி ஒரு ஈர்ப்பு இப்போதும்.

எங்கும், எப்போதும் புது புது இடங்களுக்கு பயணிப்பது அவருக்கு பிடித்தம்.அப்பா ஒரு ஊர் சுற்றிப் பறவை. பள்ளிநாட்களின் விடுமுறையில் விதிவிலக்கில்லாமல் திரிவோம் குடும்பத்தோடு எங்கேனும்.. பௌர்ணமி நடு நிசியில் கடற்கரையில், குளிர் காற்று மோத, மண் குழைத்து கட்டிய குகைக்குள் கற்பனை எஸ்கிமோக்கள் கூட விளையாட எவருக்கும் வாய்க்குமெனில், அவர் என் வீட்டில் பிறந்தவரே. வருடத்தின் எல்லா பௌர்ணமிகளும் கடற்கரையில் தான்..

கோடை இரவில் எந்த ஒரு குல்பி ஐஸ் வண்டியும் எங்கள் வீட்டு வாசலில் வியாபாரத்தை முடிக்காமல் நகர்ந்தது இல்லை. புவன், கண்ணு என்ற அழைப்பும்.. அன்பின் இசைச்சொறிவும், நெடுந்தூர பயணமும், நகையொலிக்கும் வீடும், கேரளத்து எல்லை வாளையாறு வனப்பகுதியில், மலைமுகட்டின் உச்சியில்,தாமரைக்குள நடையில், கடற்கரையில் அப்பாவோடு பிள்ளைகள் நாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய அந்த முன்பாதி நாட்களில் மீண்டும் பயணிக்க முடிந்தால்!!

march 19

அப்பாவின் பிறந்தநாள். எனக்கு தெரிந்து தீபாவளியோ, பொங்கலோ மற்ற எந்த பண்டிகைநாட்களையுமே பொருட்படுத்தியிறாத  அப்பாவிற்கு அவரின் பிறந்தநாள் தான் பிடித்தமான கொண்டாட்டத்திற்குறிய நாள். இனிப்பு உண்பதற்குரிய நாளாக பிரியப்படுவார்.
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பிள்ளைகள் போனிலாவது கூப்பிட்டு வாழ்த்து சொல்லிவிடவேண்டுமென  வருடத்தின் இந்நாளில்  குழந்தையைப்போல் எதிர்ப்பார்பவர். வாழ்த்தும் போது குரலில் துள்ளலோடு மகிழ் பொங்க  “சந்தோசம் கண்ணு” என்பவர்.. போன பிறந்தநாள் வரை அப்படித்தான்.

இந்த வருடத்தின் இந்நாள் அப்பா இல்லாத அவரின் பிறந்தநாளாகிவிட்டது.
சொத்து சுகம் எதையும் சேர்த்து வைத்திருக்காத பொழுதும், எவ்வளவு சிரமங்களை சுமந்திருந்த பொழுதும் வாழ்வின் மீது அதீத ஆர்வமும் பிடிப்பும் கொண்ட மனிதர் அப்பா.
நிறைக்க இன்னும் நிறைய வருடங்கள் வாழ்ந்திருக்கலாமேன்னு இருக்கிறதுதான். என்றாலும் நோய்ப்படுக்கையில் விழுந்தெல்லாம் சிரமப்படாமல்,
  கடைசி உணவையும் தன்னோட கையாலயே அள்ளி உண்பதற்கு வாய்த்த தெம்போடு போயிருக்காரென மனதை ஆற்றுபடுத்திகொண்டேன்.


என் போனில் அப்பாவென பதிந்துவைத்திருக்கும்  அவரின் தொலைபேசி எண்ணும்  இப்பொழுது  என்னிடம் தான் இருக்கிறது.

பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பாவென மெசெஜ் அனுப்பி “சந்தோசம் கண்ணு” என பதிலையும் அவரின் எண்ணில் இருந்து  நானே அனுப்பி பெற்றுக்கொண்டேன்.

வேர் பெயர்ந்த ரேகைகள் தூரத்தில் எங்கோ பொன்ஆம்பல் பூக்காட்டில்

உள்ளங்கைக்குள் கரைசலாய் நான்

வேரில் இருந்து விழும் நிழல்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here